எஸ்.டி.பி.எம் தேர்வை வகைபடுத்துவது,கொடுமைக்கு பிராயசித்தமாகாது - ஹிண்ட்ராப் வேதமூர்த்தி
"எண்ணும் எழுத்தும் கண்ணென கொள் " என்ற உபாத்தியார்களின் தீர்க்கமான அறிவுரைகளுடன், 11 ஆண்டு கல்வி பயணத்தை, எஸ்.பி.எம் என்ற தேர்வு களம் கண்டு, பெற்றோரும் , ஆசிரியர்களும், சமூகமும் இந்த நாடும் மெச்ச தகுந்த வெகு சிறப்பான அடைவு நிலைகளை பெற்றிருந்தும்,ஆட்சி அமைப்பு முறைகுட்படுதப்பட்ட இன ரீதியான கொள்கைகளினால் உயர் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டு வேறு வழியின்றி நிர்பந்தபடுதப்பட்ட மலாய் காரர் அல்லாத மாணவர்கள்தாம் பெரும்பாலும் எஸ்.டி.பி.எம் தேர்வுக்கு அமர்கிறார்கள் என்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தலைவர் பொ.வேதமூர்த்தி. தனியார் கல்லூரிகளிலோ , வெளிநாடுகளிலோ இந்த கெட்டிக்கார அப்பாவி மாணவர்களால் கல்வியை தொடர பொருளாதார வசதிகள் இல்லாத நிலையில் , தங்கள் முன்னே இருக்கும் ஒரே வழி எஸ்.டி.பி.எம் தேர்வுதான் என்ற சூழலுக்கு இவர்கள் தள்ளபடுகிறார்கள் என்றார் அவர்.
எஸ்.டி.பி.எம் தேர்வு பிரிட்டிஷ் ஐக்கிய ராஜ்யத்தால் (united kingdom) நடத்தபெறும் GCE A level தேர்வை முன்னோடியாக கொண்ட பல்கலைகழக புகுமுக தேர்வாகும். எஸ்.டி.பி.எம், சர்வதேச அளவில் அநேகமான பல்கலைகழகங்களில் குறிப்பாக காமன்வெல்த், அமரிக்கா மற்றும் அயர்லாந்து குடியரசு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தேர்வாகும்.
மலேசிய கல்வி அமைப்பு பல்கலைகழக புகுமுக தேர்வாக எஸ்.டி.பி.எம் தேர்வோடு மெட்ரிகுலேஷன் கல்வி முறையையும் கொண்டிருக்கிறது.
எஸ்.டி.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அப்போது அமல்படுத்தப்பட்டு வந்த இன ரீதியான மாணவர் சேர்கை முறைக்காக ஒதுக்கப்பட்டிருந்த பங்கு (quota) அமலை முடிவுக்கு கொண்டு வந்து, தகுதி ரீதியில் மாணவர்கள் உயர் கல்வி கூடங்களுக்கு சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்ற கபடத்தனமான வாக்குறுதிகளை தம்முடைய ம.இ.கா , ம.சீ.ச போன்ற ஏனைய நாட்டாமை கட்சிகளின் மூலம் மக்களை நம்ப செய்து , உயர்கல்வி துறையில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதாக நாடகமாடிக்கொண்டே 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மலாய் மாணவர்களை பல்கலைகழகங்களில் சேர்க்கும் வகையில் அப்போதைய பிரதமரான மகாதீர் முகமட் ஆட்சியின்போது வைக்கப் பட்ட வேட்டுத்தான் மெட்ரிகுலேஷன் கல்வி திட்டம் என்றார் அவர்..
எஸ்.டி.பி.எம் மற்றும் மெட்ரிகுலேஷன் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை பின் வருமாறு வகைபடுத்தினார்.
1 .மிகச்சிறந்த எஸ்.பி.எம் தேர்வுகளை கொண்டிருக்கும் மாணவர்கள் எஸ்.டி.பி.எம் தேர்வுக்கான (பிரத்தியேக வகுப்புகள் போன்ற) செலவுகளை தாங்களே ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அவர்களை விட குறைவான மதிப்பெண்களை பெற்று மெட்ரிகுலேஷன் பயிலும் மாணவர்களுக்கு மலேசிய கல்வி அமைச்சே செலவை ஏற்றுகொள்கிறது.
2 .எஸ்.டி.பி.எம் மாணவர்கள் 2 ஆண்டுகள் பயில்கையில் மெட்ரிகுலேஷன் மாணவர்கள் ஒரு ஆண்டு மட்டுமே பயில்கிறார்கள்.
3.எஸ்.டி.பி.எம் பாட திட்டம் மெட்ரிகுலேஷன் பாட திட்டத்தோடு ஒப்புநோக்கையில் மிகவும் பரந்த, ஆழமான, சிரமமான திட்டமாகும்.
4 .எஸ்.டி.பி.எம் கேள்வி தாள்கள் மலேசிய தேர்வு நிறுவனத்தால் (Lembaga Peperiksaan Malaysia ) தயாரிக்கப்பட்டு , தேசிய அளவிலான மதிப்பீடு முறையில் திருத்தப்படும் வேளையில் மெட்ரிகுலேஷன் மாணவர்களின் தேர்வு தாள்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனமே தயார் செய்து அவர்களே திருத்தமும் செய்வார்கள்.
5. எஸ்.டி.பி.எம் மற்றும் மெட்ரிகுலேஷன் ஆகிய இரு தேர்வுகளில் பல்கலைகழக நுழைவு கிடைக்காமல் போனவர்களில் எஸ்.டி.பி.எம் மாணவர்களே அதிகம் (தகுதி இருந்தும்).
6. மருத்துவம்,மருந்தியல், பல் மருத்துவம், சட்டம்,பொறியியல் போன்ற முக்கிய துறைகளில் 70 விழுக்காடு மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கு ஒதுக்படுகின்றன . எஸ்.டி.பி.எம் மாணவர்களுக்கு சாதாரண துறைகளே கிட்டுகின்றன.
மெட்ரிகுலேஷன் மற்றும் எஸ்.டி.பி.எம் ஆகிய இரு தேர்வுகளும் மாணவர்களை பல்கலைகழகங்களில் சேர்வதற்கு தயார் படுத்தும் ஒரே நோக்குடைய புகுமுக வகுபுக்களே ஆயினும் இவற்றுள் நிலவும் அநியாயமான பாராபட்சங்களால் அதிகமாக பாதிக்கப் பட்டது நம் ஏழை இந்திய இளைஞர்கள்தான். இந்தியர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு மந்திரிகளாகவும், துணை மந்திரிகளாகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகவும், செனட்டர்களாகவும் இருப்பவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
அநியாயம் புரிந்தவர்களுக்கு துணை நின்று அவர்களின் செயலை நியாபடுதினார்களே தவிர கண் கலங்கி நின்ற , நிற்க போகும் இந்திய சமூக இளைஞர்களுக்கும் யுவதிகளக்கும் நிரந்தர தீர்வு காண முயலவுமில்லை இவர்கள் முயல போவதுமில்லை.
நிலைமை இப்படி இருக்க புதிதாய் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார் துணை கல்வி அமைச்சர் வீ கா சியோங், அதாவது எஸ்.டி.பி.எம் மிற்கு பதிலாக வேறு ஒரு நிர்ணய முறையை அறிமுகபடுத்தப் போகிறார்களாம்.
பல்கலைகழக மாணவர் சேர்க்கையில் இத்தனை நாட்கள் இவர்களின் அட்டுழியத்தை மக்களிடம் நாம் அம்பலபடுத்த , எங்கே அடுத்த போது தேர்தலில் வாக்குகள் கிடைக்காமல் பொய் விடுமோ என்ற அச்சத்தில் புதிதாய் மீண்டும் ஒரு கபட்டு நாடகத்தை அரங்கேற்ற போகிறார்கள்.
மகாதீர் நாடகத்தை கண்டு ஏமார்ந்த சமூகம் அல்ல இன்றைய இந்திய சமூகம் என்பதை நாம் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
பாரிசான் அரசு செயல்படுத்தும் எந்த திட்டத்திலும் சூதும் வாதும் பின்னி பிணைந்துதான் கிடக்கும்.
நாம் கேட்பதெல்லாம் குறைவான மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி பெரும் வழிமுறைகளை சுலபமாக்கிவிட்டு, சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வி உரிமைகளை மறுப்பது ஏன் என்பதுதான்.
இதற்கு முதலில் தீர்வு காணட்டும் கல்வி அமைச்சு.இந்த அநியாயத்தை மக்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று இவர்களால் எப்படி நினைத்து அரசு புரிய முடிகிறது?
எஸ்.டி.பி.எம் தேர்வை மூன்று பகுதி காலமாக மாற்றப் போகிறார்களாம்! இதனால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் ஒரு புறம் இருக்க நாம் எதிர்பார்க்கும் நிரந்தர தீர்வாக இது ஒரு போதும் அமையாது.
நாம் கேட்பது இன,மத வித்தியாசம் இல்லாமல் எஸ்.பி.எம் தேர்வில் 5 A க்களுக்கு மேல் தேர்வு பெற்ற அணைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் கல்வி தொடர வாய்ப்பளிக்கப் பட வேண்டும் என்பதுதான்.
சுருங்க சொன்னால் மூன்று பருவங்களாக எஸ்.டி.பி.எம் தேர்வை வகைபடுத்துவது அந்த தகுதி வாய்ந்த அப்பாவி மாணவர்களுக்கு இந்த பாரிசன் அரசு நிகழ்த்திய கொடுமைக்கு பிராயசித்தமாகாது என்று ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கூறினார்